தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி- ‘ஜெ’வின் பாதை ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!

அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு ஆளுமை மிக்க தலைமையாக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.

Jayalalitha 4th death anniversary
Jayalalitha 4th death anniversary

By

Published : Dec 5, 2020, 8:47 PM IST

Updated : Dec 5, 2020, 10:47 PM IST

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள மெலுக்கோட் என்ற இடத்தில், 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஜெயராம்-வேதவள்ளி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார் கோமளவள்ளி என்னும் இயற்பெயர் கொண்ட ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் தாத்தா தனது பணி காரணமாக மைசூருவில் இருந்து ஸ்ரீரங்கம் குடிபெயர்ந்தார். அதனால்தான் பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கும் ஸ்ரீரங்கத்தும் ஒரு தனி பிணைப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவரது தந்தை ஜெயராம் மறைந்தார். அப்போது பெங்களூருவில் வசித்து வந்த தாயார் வேதவள்ளி தனது இருப்பிள்ளைகளை வளர்ப்பிற்காகவும், குடும்ப சூழலைக் கருதியும் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.

கதாநாயகி மட்டுமல்லாது துணை கதாபாத்திரங்கள் முதற்கொண்டு நடிக்க தொடங்கிய வேதவள்ளி, 1952ஆம் ஆண்டு பணி காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தார். பின்னாளில் தனது பெயரை சந்தியா எனவும் மாற்றிக்கொண்டார்.

பாட்டி, தாயாரின் அக்கா பத்மவள்ளி அரவணைப்பில் வளர்ந்த ஜெயலலிதாவிற்கு கல்வி மீது அலாதி ஆர்வம் இருந்தது. சிறு வயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா, முதலில் பெங்களூருவில் உள்ள பிஷப் கார்டன் பெண்கள் பள்ளியில் பயின்றார்.

பள்ளிப்படிப்பின் போது ஜெயலலிதா

பத்மவள்ளிக்கு திருமணமான பின்னர் 1958ஆம் ஆண்டு தாயுடன் வசிப்பதற்காக சென்னைக்கு குடிபெயர்ந்த ஜெயலலிதா, தனது கல்வி படிப்பை சர்ச் பார்க் பள்ளியில் தொடர்ந்தார்.

தனது வாழ்க்கையின் சிறந்த நாள்களாக சர்ச் பார்க் பள்ளிக் காலத்தை கருதுவதாக அவர் முதலமைச்சரான பின்பும் பல முறை கூறியிருக்கிறார்.

பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு இடமளிக்க ஸ்டெல்லா மேரிஸ் உள்ளிட்ட பல கல்லூரிகள் முன்வந்தன.

ஜெயலலிதா அதில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியை தேர்ந்தெடுத்தார். ஆனால் தாயாரின் வற்புறுத்துதலின் பெயரில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சேர்ந்த சில நாள்களிலேயே தனது கல்வியை கைவிட்டு திரைத்துறையில் நுழைந்தார்.

இதனால் அவரது உயர்கல்வி கனவுகள் தகர்ந்துபோயின. ஒருவேளை தான் நடிகையாக இல்லாமல் இருந்திருந்தால் வழக்குரைஞர் ஆகியிருப்பேன் என்றும் அவர் பின்னாளில் பல முறை கூறியிருக்கிறார்.

நடிகை ஜெயலலிதா

புதுமுக நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். வெகுவாக அவரது படங்கள் வெற்றியடைய முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 140க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். புத்தக வாசிப்பு மேல் அதீத ஆர்வம் கொண்ட அவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கனடா, அரபி உள்ளிட்ட 7 மொழிப் புலமையும் இருந்தது.

காலத்தின் தேவை காரணமாக திரைத்துறைக்குள் நுழைந்த ஜெயலலிதா, அதேபோல் அரசியலிலும் அடியெடுத்துவைத்தார்.

ஆனால் திரைத்துறையை போல் அரசியல் அவருக்கு அவ்வளவு எளிதாக கை கொடுக்கவில்லை. 1982ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார் எம்ஜிஆர்.

இதனைக் கட்சியினர் மட்டுமின்றி அவரேகூட எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்காத பொறுப்பு கையில் வந்ததும் அதைக் கண்டு பதற்றப்படாமல் தனக்கு கிடைத்த பொறுப்பை வைத்து தன்னை எம்ஜிஆரிடமும், அதிமுவின் ரத்தத்தின் ரத்தங்களிடமும் நிரூபித்தார்.

கருணாநிதி, அண்ணா போன்று அடுக்குமொழி பேச்சுத்திறன் இல்லாவிட்டாலும், ஜெயலலிதாவின் தெளிவான பேச்சும், அவரது திரை செல்வாக்கும் சாமானிய மக்களை வெகுவாக ஈர்த்தது.

அரசியலில் நுழைந்த காலத்தில் ஜெயலலிதா

1984ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது எம்ஜி.ஆருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, கிராமம் கிராமமாக சென்று அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார். அத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனால் எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா என சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இது அக்கட்சியைச் சேர்ந்த சிலரிடையே சலசலப்பை ஏற்படுத்தின. இதையெல்லாம் பொருட்படுத்தாத ஜெயலலிதா அரசியல் களத்தில் தனது தீவிர பங்கை வெளிப்படுத்தினார்.

பின்பு அதே ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு, பேரறிஞர் அண்ணாவிற்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 185ஆம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டது.

முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது

இச்சமயத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த எம்.ஜி.ஆரின் இறுதி சடங்கில் ஜெயலலிதா தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலை அடுத்து கட்சிக்குள் தனது ஆளுமையை நிரூபித்து ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட ஆதரவாளர்களின் துணையோடு அதற்கான முதல் அடியை எடுத்து வைத்தார்.

இரண்டாக பிளவுற்ற அதிமுக ஜெ அணியாகவும், ஜா அணியாகவும் உருமாறியது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜா அணி வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்க ஜெ அணி 27 இடங்களை கைப்பற்றி கோட்டைக்குள் நுழைந்தது. தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.

இதனையடுத்து இரு அணியும் ஒன்றாகி மீண்டும் அதிமுகவாக மாற அக்கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

ஆனால் அவரை சிலர் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனாலும் அந்த எதிர்ப்புகள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அசைத்து பார்க்கவில்லை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற ரகளையின்போது திமுகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும், மக்களின் கரிசனப் பார்வை ஜெயலலிதா மீது இருந்தது.

ராஜிவ் காந்தி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்ட பிறகு 1991ஆம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி வைத்த அவர் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார்.

ஜெ. ஜெயலலிதா

ஆழ்ந்த திராவிட பிடிப்பு கொண்டவராக ஜெயலலிதா இல்லாவிட்டாலும், மாநில சுயாட்சி, இடஒதுக்கீடு போன்றவற்றில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்கியதில்லை.

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டை 69 சதவிகிதம் உயர்த்தியது அவரது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. அவர் கொண்டு வந்த, மழைநீர் சேகரிப்பு திட்டம், தமிழ்நாடு முழுவதும் சிற்றுந்து, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு, தொட்டில் குழந்தை திட்டம், நில அபகரிப்பு தடுப்புச் சட்டம், கந்து வட்டி தடுப்புச் சட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம், அம்மா உணவுத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு, கள்ளச்சாராயம் ஒழிப்பு திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் பெரிதும் பாராட்டத்தக்கவை.

ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பல நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், ஆட்சிப்பொறுப்பேற்றவுடனே திமுகவின் நலத்திட்டங்களுக்கு அவர் முட்டுக்கட்டை போட்ட வரலாறும் உண்டு.

அவர் ஆட்சியில் இருந்த காலத்திலும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்திலும் ஊடகங்களும், அரசியல் நிர்வாகிகளும் அவ்வளவு எளிதில் அவரை நெருங்கமுடியவில்லை.

அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம், ஜெயலலிதா கடுமையானவர் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், பல விமர்சனங்களையும், தனி நபர் தாக்குதலையும் சந்தித்த அவருக்கு ஒரு பெண்ணாக அந்த இரும்புக்கரம் அவசியப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவும், ஊடகங்களும் மோடி அலையை எழுப்பி கொண்டிருக்க ஜெயலலிதாவோ, மோடியா, இந்த லேடியா? என்று கேட்டுவிட்டு தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் இரண்டாவது பெரும் கட்சியாக நாடாளுமன்றத்திற்குள் அதிமுகவை அமரவைத்தார். அதுமட்டுமின்றி, காமராஜர், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்தார்.

2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாள்கள் போராட்டத்திற்கு பின்னர் டிசம்பர் 5ஆம் தேதி, தனது 69 வயதில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் ஆட்சி மீது அதிருப்தி இருந்தவர்களுக்கும் அவரது இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

தன்னை சுற்றி அவர் போட்டுவைத்துக்கொண்ட ஒற்றைத் தலைமை என்ற வட்டத்தால் அவருக்கு பிறகு அதிமுகவின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த எந்த தெளிவையும் அவர் ஏற்படுத்தவில்லை என்ற அதிருப்தி இன்னமும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு இருக்கவே செய்கிறது. இருந்தாலும், நடிகை ஜெயலலிதாவிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவாக மாறிய அவரது பாதை அவ்வளவு எளிதானதல்ல.

Last Updated : Dec 5, 2020, 10:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details