சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியத்தினை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 7,374 கவுரவ விரிவுரையாளர்களுக்கும் மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயினை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது.
இதுபோன்று பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் 347 பேருக்கு மதிப்பூதியம் 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜெயிலர் தகர்த்தெறிந்த 16 சாதனைகள்... எட்ட முடியாத உயரத்தில் சூப்பர் ஸ்டார்...
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7,374 கௌரவ விரிவுரையாளர்கள் அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 1,049 கௌரவ விரிவுரையாளர்கள் என 8,423 கவுரவ விரிவுரையாளர்கள் பலன் அடைந்துள்ளனர்.
ஊதிய உயர்வு அறிவிப்பினை ஆசிரியர் தினத்திற்கு முன்பாக வெளியிட்ட முதலமைச்சர், உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Speaking For India : முதலமைச்சர் ஸ்டாலினின் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" ! இந்திய மொழிகளில் ஆடியோ வெளியீடு!