சென்னை:நாடு முழுவதும் பரவிக்கொண்டு இருக்கும் 'எச்.3 என் - 2' வைரஸ் பாதிப்பால் பலருக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்டவைகள் இந்த வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகும். ஏற்கனவே, வந்த கரோனாவின் கோரப் பிடியிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீண்டு வருவதற்குள்ளாகவே அடுத்த வைரஸ் பரவல் தாக்கத்தினால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இதனிடையே, இந்த வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சிலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் பொது மக்களின் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு, இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி, தமிழ்நாடு முழுவதும் வருகிற மார்ச் 10ஆம் தேதி, 1,000 இடங்களில் 'காய்ச்சல் முகாம்கள்' நடைபெறும் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (மார்ச்.5) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னையில் 200 இடங்களிலும், காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த காய்ச்சல் முகாம், காலை 9 மணிக்கு தொடங்கி தேவைக்கேற்ப நடைபெறும் இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.