சென்னை:ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் நுண்துளை மூலம் மூளையின் ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தை அகற்றி பக்கவாதம் இல்லாமல் பிரதாப் என்ற இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டுத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ரத்தம் உறைதலால் ஏற்படும் பாதிப்பில் இருந்து குணமடைய முதல் 4 மணி நேரம் முக்கியமான நேரம். அதற்குள் மருத்துவமனைக்குச் சென்று விட்டால் உடனடியாக குணப்படுத்த முடியும். தமிழகத்தில் 78 அரசு மருத்துவமனைகைளில் பக்கவாதத்தை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் பயன்பாட்டில் உள்ளன.
அதிக அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை வசதிகள் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் ரத்தம் உறைவதினால் பக்கவாதம் ஏற்பட்டு 14 ஆயிரத்து 784 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் 314 பேர். மீதம் உள்ளவர்களுக்கு சிகிச்சைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல் ரத்தக் கசிவுனால் பக்கவாதம் ஏற்பட்டு 4 ஆயிரத்து 858 பேர் சிகிச்சைப் பெற வந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி 36 வயதுடைய பிரதாப் என்ற இளைஞர், இடது கை மற்றும் கால் செயல் திறன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு உடனடியாக mechanical chrompactamy என்ற சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது பிரதாப் 90 சதவீதம் குணமடைந்துள்ளார். இந்த நுண்துளை ரத்தநாள சிகிச்சை முறைக்கு தனியார் மருத்துவமனைகளில் 6 முதல் 8 லட்சம் ரூபாய் செலவாகிறது. தமிழகத்தில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு மூலம் செய்யப்படுகிறது.
இதுபோன்ற பாதிப்புகள் தென்பட்டால் தமிழகத்தில் இருக்கின்ற மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு இருக்கிறது. மக்கள் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரத்த அழுத்த பக்கவாதப் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்கு வந்தவர்களில் கடந்த 2019ஆம் ஆண்டு 98 பேரும், 2020ஆம் ஆண்டு 106 பேர், 2021ஆம் ஆண்டு 247 பேரும், 2022ஆம் ஆண்டு 316 பேரும் நலமடைந்து இருக்கிறார்கள். H3N2 காய்ச்சல் பாதிப்பு இந்தியா முழுவதும் உள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே ஐ.சி.எம் ஆர் வெளியிட்டுள்ளது. ஆனால் சென்னையில் உள்ள கொசுவின் மூலம் தான் நோய் தொற்று பரவி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். பீகார், உத்தரபிரதேசம் குஜராத்தில் நோய்த்தொற்று பாதிப்பு வந்தவர்களுக்கு கிண்டியில் உள்ள கொசு தான் காரணமா. அரசியல் செய்வதற்காக அவர் இவ்வாறு பேசி வருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆதித் தமிழர் - நாம் தமிழர் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு - அடிதடி போராட்டம்!