தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தாலும், உள்ளாட்சித் துறை உட்பட பிற துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால், டெங்கு கொசு உற்பத்தி ஆகக்கூடிய பொருட்களை அகற்றுவதில் பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை டெங்கு தடுப்பு தினம் கொண்டாட வேண்டுமெனவும் அதற்குரிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதில், 'டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரம்தோறும் சுற்றுப்புறத்தை தூய்மைப் படுத்த வேண்டும். தற்போது பரவி வரும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் ஏடிஸ் கொசுக்கள் உருவாவதை, அழிப்பதற்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை டெங்கு தடுப்பு தினம் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் இதனை மேற்கொள்ளலாம்.
Tamil Nadu Health Department Warning, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கம்பெனிகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், தீம் பார்க்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள், அனைத்து வழிபாட்டுத் தளங்கள் ஆகிய இடங்களில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த டெங்கு தடுப்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், நிறுவனத்தின் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சுய உதவிக் குழுக்கள், சத்துணவு திட்ட பணியாளர்கள், தூய்மை காவலர்களாக உள்ள மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தினர் போன்றவர்களைப் பயன்படுத்தலாம்.
ஏடிஸ் கொசுக்கள் அழிவதற்கு குறிப்பிட்ட பகுதியில் அனைவரும் இணைய வேண்டும். அவர்களுக்கு டார்ச் லைட், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அளிக்கவேண்டும். உடைந்த தேங்காய் மட்டைகள், பழைய டயர்கள், பயன்பாட்டில் இல்லாத பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும். குழுவில் உள்ள நபர்களைப் பிரித்து, வளாகத்தினை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தேவையற்ற பூந்தொட்டிகள் போன்ற தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் வைக்கக் கூடிய அனைத்துப் பொருட்களையும் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கக்கூடிய தொட்டிகளை வாரம்தோறும் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஏடிஎஸ் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வளாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைவரும் தங்களின் பகுதியில் வாரம் ஒருமுறை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள துறைத்தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #HBDKeerthySuresh கீர்த்தி சுரேஷுக்கு ‘மிஸ் இந்தியா’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!