மாணவர்களுக்கு சிறிது காலத்திற்கு புத்தகப்பை கொண்டு வருவதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என ஆசிரியர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டதாவது; 'ஜூன் மாதம் 15ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, பல்வேறு சூழலில் இருந்து மீண்டும் பள்ளிக்கு வர இருக்கும் குழந்தைகளின் மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. அச்சத்திலும், பதற்றத்திலும் இருக்கும் குழந்தைகளை நேரடியாகத் தேர்வு மையத்திற்கு வரச் சொல்வது ஒரு நியாயமற்ற நடவடிக்கை. எனவே பள்ளி திறந்து குறைந்தது 15 வேலை நாட்கள் வகுப்பு நடத்திய பின்பே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் .
பள்ளிகள் திறப்பதிலும் தேர்வுகள் நடத்துவதிலும் அவசரப்போக்கை அரசு கைவிட வேண்டும். சுயமாக கற்றல் என்பது கல்லூரி மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும். கணினியிலோ, செல்பேசியிலோ வகுப்பை எதிர்கொள்ளும் மனநிலையானது பள்ளி குழந்தைகளுக்கு ஒரு கற்றல் வழிமுறையாக இருக்க வேண்டுமே தவிர, முழுக் கற்றல் முறையாக மாறிவிடக்கூடாது. பள்ளியில் நடைபெறும் நேரடி வகுப்பிற்கு மாற்றாக இணையதள வகுப்பு நடத்தப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. இணையதள வழியில், வகுப்பு நடத்தப்படுவதைப் பாடத்திட்ட வேலை நாளாக அங்கீகரிக்க இயலாது என்று அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள மத்தியப் பாடத்திட்டப் (CBSE/ ICSE) பள்ளிகள் உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகள் இணையதள வழியாக வகுப்புகள் நடத்துவதையும்; அதை வேலை நாட்களாகவும், கற்றல், கற்பித்தல் நாட்களாகவும் கருதக் கூடாது. இது போன்ற நிகழ்வுகளை உடனடியாக நிறுத்தத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இணையதள வகுப்பு நடத்துவதை, அரசு அனுமதிக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி பெற்றோரை இணையதள வகுப்பிற்கான கருவிகளை வாங்கித் தர வற்புறுத்தக் கூடாது.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக பள்ளிக்கு வரும் குழந்தைகள் உடல் நிலை, மனநிலை, பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் கொண்டே பள்ளிகளைத் திறக்க வேண்டும். நோய்ப் பரவலுக்கான அதிக வாய்ப்புள்ள சூழல் இருப்பின் குழந்தைகளின் உயிரை முக்கியமாகக் கருதியே கால சூழல் சாதகமான பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும். பள்ளிகளைத் தொடங்குவதில் அவசரம் காட்டக் கூடாது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விலையின்றி முகக்கவசத்தை அரசே வழங்க வேண்டும். பள்ளி சீருடைகள் உடன் இணைத்து இவற்றையும் வழங்க வேண்டும் .