சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிர்வாகக்குழுவையும் மாற்றி அமைத்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவராக கூடுதல் தலைமைச் செயலளார் அந்தஸ்திலும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் , துணை இயக்குநர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பதவிகளில் 71 பணியிடங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாமல் தவித்து வந்தது. இதனால் தேர்வுகளை விரைந்து நடத்துவதிலும், தகுதியானவர்களை தேர்வு செய்து அளிப்பதிலும் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தரத்தை மேம்படுத்த வழிமுறைகளை வகுக்க அரசு குழு அமைத்தது. ஆசிரியர் உள்பட பணி நியமனங்களை விரைவுப்படுத்தவும், முறைகேடுகள் எதுவும் இன்றி தேர்வுகளை நடத்தவும், அந்த குழு 39 பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்தது.
அதனை ஏற்றுக்கொண்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ’தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாகப் பிரிவு, அறிவிப்பு பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் அறியும் உரிமைப் பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப் பிரிவு, ரகசியப்பிரிவு, தேர்வு நடத்துதல் பிரிவு, சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவு, நூலகப் பிரிவு ஆகிய 11 பிரிவுகள் திறமையானதாகவும், பயனுள்ளதாகவும் ஏற்படுத்தப்பட்டு மறு சீரமைக்கப்படுகின்றன.
இது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இது தவிர, மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர் , இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர் உள்பட 71 பதவியிடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.