சென்னை: தமிழறிஞர்களுக்கும் தமிழ் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று (மார்ச். 15) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மொத்தம் 21 பேருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை மறைந்த மு.மீனாட்சிசுந்தரம் மனைவி வசந்தா, 2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை நாஞ்சில் சம்பத், பெருந்தலைவர் காமராசர் விருதினை முனைவர் குமரி அனந்தன், மகாகவி பாரதியார் விருதினை பாரதி கிருஷ்ணகுமார், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை புலவர் செந்தலை கவுதமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதேபோல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதினை முனைவர் ம.இராசேந்திரன், கம்பர் விருதினை பாரதி பாஸ்கர், சொல்லின் செல்வர் விருதினை சூர்யா சேவியர், ஜி.யு.போப் விருதினை அ.சு.பன்னீர் செல்வன், உமறுப்புலவர் விருதினை நா.மம்மது, இளங்கோவடிகள் விருதினை நெல்லை கண்ணன், சிங்காரவேலர் விருதினை கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், மறைமலையடிகளார் விருதினை சுகி.சிவம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருதினை முனைவர் இரா.சஞ்சீவிராயர், அயோத்திதாசப் பண்டிதர் விருதினை ஞான.அலாய்சியஸ், 2020 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினை முனைவர் வ.தனலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக 2021 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை க.திருநாவுக்கரசுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வழங்கப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை நீதியரசர் சந்துருவுக்கும் வழங்கப்பட்டன. மேலும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும் தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரனுக்கு வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும் இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.