அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை எனக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழ்நாடு அரசு மூடி வருவதாக முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126இல் இருந்து 131 ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர் என்பதனை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது.
131 அம்மா மருந்தகங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.48.21 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.93.09 கோடிக்கு இந்த ஆண்டில் 31.10.2021 வரை வர்த்தகமாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெள்ள சேத பாதிப்புகளை கணக்கிட மத்திய குழு - எந்தெந்த தினங்களில், எங்கெங்கு ஆய்வு செய்கிறது?