சென்னை:பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, காலியாக உள்ள இரண்டாயிரத்து 774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிறப்புவது குறித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், “பள்ளிக் கல்வித் துறையில் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2018- 19 ஆம் கல்வி ஆண்டில் ஆயிரத்து 474 பேரும், 2019-20 கல்வி ஆண்டில் இரண்டாயிரத்து 449 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA - Parents Teacher Association) மூலம் நியமனம் செய்யப்பட்டனர்.
முக்கிய பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் தேவையான இரண்டாயிரத்து 774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் நியமனம்
அதனடிப்படையில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் அரசு ,நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களான தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் தாவரவியல் விலங்கியல் பொருளியல் வரலாறு புவியியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்கள் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் குழு அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து நியமித்துக் கொள்ளலாம்.
தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அவர்கள் நியமனம் செய்யப்படும் நாளில் இருந்து ஐந்து மாதங்களுக்கு அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அல்லது பதவி உயர்வு மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை இவற்றில் எது முந்தியதோ அதுவரையில் மட்டும் நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA - Parents Teacher Association) மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.82 கோடி வருமான வரி.. உயர் நீதிமன்றம் கண்டிப்பு.. விழிபிதுங்கும் ஓபிஎஸ்!