சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாட்டிலேயே முதன் முறையாக ‘மணற்கேணி’ என்ற செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதனை மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் UNCCD துணைப் பொதுச் செயலாளர் அல்லது நிர்வாகச் செயலாளர் இப்ராஹிம் தயாவ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மணற்கேணி செயலி ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் துணைக் கருவிகளில் ஒன்றாகும். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப் பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே இச்செயலியின் நோக்கம்.
மணற்கேணி செயலியில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை 27,000 பாடப்பொருளாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலாக விளக்கங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காணொலி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனை சரிபார்க்கும் வசதியும் உள்ளது.
நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் எண்ணம் எல்லோருக்கும் எல்லாமும் போய் சேர வேண்டும் என்ற வகையில்தான் இது போன்ற பல முன்னெடுப்புகள் எடுத்து வருகிறோம். 'தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு'. அனைவருக்கும் புரிவதற்காகத்தான் இந்த செயலி.
மாணவச் செல்வங்கள் எளிதில் கல்வியை கற்க எடுக்கப்படும், முன்னெடுப்பு. வகுப்பறையில் படிப்பதை காட்டிலும் செயலியில் வீட்டில் இருந்தபடியே படித்து கொள்ள புரியும். வகுப்பில் சந்தேகம் கேட்கும்போது மற்றவர்கள் சிரித்து விடுவார்களோ, இது கூட தெரியாமல் என யோசிக்காமல் இந்த செயலில் சென்று பார்த்து கொள்ளலாம்.