சென்னை:நாடெங்கும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடந்துவரும் ஊரக வளர்ச்சி பணிகள் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும். 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெறவும் திறன்சாரா வேலை பெறவும் உரிமை உண்டு.
கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நலிவுற்ற பிரிவினருக்கான தனிநபர் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, பண்ணைக்குட்டை அமைத்தல், நில மேம்பாட்டுப் பணிகள், நிலத்தை சமன் செய்தல், கல் வரப்பு மற்றும் மண்வரப்பு அமைத்தல், தனிநபர் நிலங்களில் பழம் தரும் மரங்கள் நடுதல், நடெப்(NADEP) உரக்குழி, வெங்காயக் கொட்டகை, அசோலா சாகுபடி அலகு, தோட்டக்கலைத் தோட்டம், தனிநபர் கிணறு, மாடு, ஆடு, கோழி கொட்டகை அமைத்தல் போன்ற பிற தனிநபர் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.