தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தொழிலாளர்கள்

TN Govt Deepavali Bonus: தமிழக அரசின் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
அரசு பொதுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 10:44 PM IST

சென்னை:தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால் தான் நாடே வியக்கும் வண்ணம் பொருளாதார வளர்ச்சியை அடைந்தது மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க அந்நிய முதலீடுகளையும் தமிழ்நாடு ஈர்த்து வருகிறது.

எனவே, தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட மிகை ஊதியச் சட்டம் 2015-இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையானது கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 10 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

இது தவிர, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள், குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரத்து 400-ம் அதிகபட்சம் ரூ.16 ஆயிரத்து 800-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளர்களுக்கு 402 கோடியே 97 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், எதிர் வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சொந்த கிராமத்தை உயர்த்த காய்கறி சந்தை.. வெளிநாட்டு தொழிலதிபரின் மகத்தான செயல்!

ABOUT THE AUTHOR

...view details