சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 2023ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி விவசாயிகள் தடையை மீறி பேரணியாகச் சென்றனர். அப்போது, வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயியும், வேளாண் உரிமை செயற்பாட்டாளருமான அருள் ஆறுமுகம் உள்பட ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அருள் ஆறுமுகம் தவிர மற்ற 6 பேர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பின்னர், விவசாயி அருள் மட்டும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், விவசாயி அருள் மீதான குண்டாஸ் வழக்கினை ரத்து செய்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்துள்ள மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு, பாகுபாட்டோடு பொய் வழக்குப் பதிவு செய்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு தரப்பில், “திருவண்ணாமலை மேல்மா சிப்காட் பணிக்காக, விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடிய 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்ததோடு, குறிப்பாக 7 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் 2023 நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்தது.