சென்னை: விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக ஆட்சி அமைந்தவுடன் பல நாட்களாக இலவச மின்சாரத்திற்காகக் காத்திருந்த ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய பின்னர் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிய மீட்டர் பொருத்தப்படும் என அறிவிப்பானது இலவச மின்சாரத்தை அரசு ரத்து செய்யப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால், "விவசாயிகள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்று கண்டறிந்தால் தேவையில்லாத மின் இழப்பைத் தவிர்க்கலாம். அதற்காக மீட்டர் பொருத்தப்படுகிறது" என மின்சாரத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மின்கட்டணம் உயர்த்திய போதும் விவசாயிகளுக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான சுற்றறிக்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.