தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த 84 பாதுகாப்பு வீரர்களுக்கு ஜூலை 23ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் 38 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 35 நபர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது.
அவரது உதவியாளர் உள்பட மூவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த வாரம் ஆளுநரை பரிசோதனை செய்த மருத்துவ அலுவலர், ஆளுநர் நலமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனாலும் மருத்துவர் ஆளுநரை 7 நாள் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்குமாறு அறிவுரை வழங்கியிருந்தனர். அதனை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை 7 நாள் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதனிடையே, புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை சென்றார் . அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் ஆளுநர் மாளிகையிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவமனை அறிவுரை வழங்கியது. அவர் மருத்துவமனையிலிருந்து ராஜ் பவனுக்கு திரும்பினார்.
இந்நிலையில், காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சாதாரண அறிகுறிகள் உள்ளன. அவர் உடலளவில் நலமாக உள்ளார். காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சாதாரண அறிகுறிகள் அவருக்கு இருப்பதால் ஆளுநரை அவரது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் மக்களவை உறுப்பினர்!