சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரையில் மாற்றம் செய்யப்பட்டதோடு, சில வார்த்தைகளை தவிர்த்து ஆளுநர் ரவி உரையாற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டப் பேரவையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் ஆவேசமடைந்த ஆளுநர் ரவி கூட்டம் முடிவதற்கு முன் அங்கிருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்த வெளிநடப்பு சர்ச்சையான நிலையில் ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் டி.ஆர். பாலுவுடன் அடங்கிய குழுவினர் ஆளுநர் நடந்து கொண்ட விதம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடும் நேரடியாக கொடுத்தனர்.