சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில் ஆளுநரின் "எண்ணித்துணிக" பகுதி- 9 வது நிகழ்வு நடைபெற்றது. அதில் தேசிய அளவில் விருது பெற்ற ஆசிரியர்கள் 24 பேருக்கு நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன். குறிப்பாக பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். மின்சாரம் இல்லாமல், எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதியில் கூட, பல கிலோமீட்டர் நடந்து சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் நிறைய உள்ளனர். நான் சிறுவயதில் மாணவனாக இருக்கும் போது எனது ஆசிரியர் குளிப்பதற்கு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன். ஆசிரியர் மாணவர் என்பது ஒரு உறவு. ஆசிரியர் உறங்கும் போது அவரது கால்களை பிடித்துவிடுவேன்.
அவர்கள் ஆசிரியர்கள் அல்ல, அதற்கும் மேலானவர்கள். அவர்களை குரு என்று அழைத்தோம். அதுதான் நமது பண்பாடு. ஆண்டாண்டு காலமாக அதைத்தான் நாம் பின்பற்றி வந்தோம். குருவிற்கும், மாணவருக்கும் இடையேயான உறவு மட்டுமே இருந்தது. மாணவரின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் என யாரும் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க முடியாது.
வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஆசிரியர்களின் நிலை கடினமாக உள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் என அனைவரும் ஆசிரியர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஆன உறவும் இப்போது கிடையாது.
இன்று இந்தியா G20 மாநாட்டின் தலைமை ஏற்று நடத்துகிறது. 2047ம் ஆண்டு உலகில் தலைசிறந்த நாடாகவும், உலகிற்கு வழி காட்டும் நாடாகவும் இந்தியா மாறும். உலக அளவில் நாம் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் 3வது நாடாக உள்ளோம். நம் நாட்டில் புத்தொழில் வளர்ச்சி அதிகமாகி உள்ளது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தேசிய சொத்துக்கள்.
இங்கு ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியைகள் அதிகம் உள்ளனர். பெண்களுக்கான வளர்ச்சி என்பது நமது சமூகத்தில் அதிகம் உள்ளது. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியாரின் கவிதைக்கு இணங்க, பட்டமளிப்பு விழாக்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் தான் உள்ளனர்.
பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலக அளவில் இருக்கும் வாய்ப்புகளை பெண்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இருப்பது நிறைய பேருக்குத் தெரியவில்லை. பெண்களுக்கான வாய்ப்புகள் பற்றி அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.
ஆளுநர் R.N.ரவி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல்:
- எதிர் காலத்தில் ஆசிரியர்களின் இடங்களை செயற்கை நுண்ணறிவு பூர்த்திசெய்து விடுமா, "செயற்கை நுண்ணறிவு மிகவும் சிறந்த தொழில் நுட்பமாக உள்ளது. மனிதர்களை வழி நடத்தும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களால் சுயமாக யோசிக்க முடியாது. அதுவரை மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவைகளுக்கு வழங்கப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் தான் அவைகள் செயல்படும். அவற்றால் ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.
2. உங்களுக்கு மிகவும் பிடித்த பள்ளிக்கூட ஆசிரியர் யார்? அவரிடம் பிடித்த நற்குணம் என்ன?
எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் சமஸ்கிருத ஆசிரியர் தான். அவர் சிறப்பாக கதை சொல்லுவார். அவரது வகுப்பை அனைவரும் கவனிப்போம். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு கதை சொல்லுவார். அவர் நடத்தும் பாடத்தை கவனிக்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும்
3.பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது. பெற்றோர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது இது பற்றி உங்கள் கருத்து ?
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடைவெளி கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. போட்டி நிறைந்த உலகம் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போட்டிக்காக தயார் செய்யும் மனநிலையிலேயே அணுகுகிறார்கள். பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்புவது கிடையாது. இதற்கு முன் ஆசிரியர்கள் குழந்தைகளை தண்டித்தார்கள், அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். ஆனால் தற்போது மாணவர்களை தண்டிக்க சட்டத்தில் கூட இடம் கிடையாது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பது அவர்களின் நன்மைக்கு தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளும் சூழல் தற்போது இல்லை. நான் நிச்சயமாக சொல்கிறேன் வரும் காலத்தில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறத்துக்கே இந்த நிலையா..? - ஆதங்கத்தில் கிராம மக்கள்!