சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் "ஒரே பாரதம் உன்னத பாரதம் - யுவ சங்கமம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாரத் தர்ஷன் சுற்றுலாவுக்காக சென்னை வந்த திரிபுரா மாநிலம் அகர்தலா உள்ள தேசிய தொழில்நுட்ப மைய மாணவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது அவர், "2047ஆம் ஆண்டுக்குள் உலக தலைவராக இந்தியா வருவதற்கான உறுதியான நிலையை அமிர்த காலத்தின் பொற்காலத்தில் எட்டவும் பாரதத்தின் மறுமலர்ச்சிக்கு "ஒரே பாரதம், உன்னத பாரதத்தை" என்ற உறுதியான கோட்டுபாடு அவசியமான ஒன்றாகும்.
இந்தியா, ரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகிகளால் உருவாக்கப்பட்ட கலாசார மற்றும் நாகரிக பரிணாம வளர்ச்சி கொண்டது. மாமல்லபுரத்தின் பல்லவ மன்னன், அறிவைத் தேடி நாலந்தாவுக்குச் சென்று போதி தர்மனாக மாறி, பவுத்த மதத்தை சீனாவுக்குக் கொண்டு சென்றார். அங்கே ஷாலின் மடங்களை நிறுவிய அவர், குங் ஃபூவை சீனாவிற்கு அறிமுகப்படுத்தினார்.
சிட்டகாங் பகுதி அக்காலத்தில் பவுத்த ஆய்வு மையமாக திகழ்ந்தது. ராமேஸ்வரம் வந்த அசாம் மகரிஷி சங்கர் தேவ் அங்கிருந்து காசி சென்று பல சத்திரங்களை நிறுவினார். சமுதாயம் ஒன்றாக இருந்ததால், மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் இந்த பெரிய நிலத்தை கடந்து சென்றனர்.
பாரதத்தின் வரலாறு பரிணாம வளர்ச்சியில் மகத்தான பங்காற்றிய மாபெரும் ஞானிகளால் நிறைந்தது. இந்தியா காலனித்துவப்படுத்தப்படுவதற்கு முன்பு இரும்பு, பருத்தி மற்றும் தோல் உற்பத்தியில் முன்னணியில் இருந்தது. அவை பாரதத்தை உன்னதம் ஆக்கின.
ஒரே பாரதத்தின் உணர்வையும், ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சமூக ஆதரவுடன் செயல்பட்ட அறநிலைய மானியங்கள் அந்த நிலத்தில் வாழும் சமூகத்தால் பராமரிக்கப்பட்டன. நமது பண்டிகைகள் (சங்கராந்தி, பொங்கல், பிஹு, லோஹ்ரி போன்றவை), நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள் அனைத்தும் இந்த ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன.
கன்னியாகுமரியாக இருந்தாலும் சரி, காம்ரூப் ஆக இருந்தாலும் சரி, பூமி அன்னைக்கு மக்கள் மரியாதை செய்யும் வழக்கத்தை ஒரே மாதிரியாகவே கொண்டிருந்தார்கள். ஒரு மரத்தில் இரண்டு இலைகள் ஒரே மாதிரி இருக்காது. ஒரு மரத்தை அதன் இலைகள் வழியாகப் பார்த்தால், வேறுபாடுகள் மட்டுமே தோன்றும், ஆனால் மரத்தை ஒரு இயற்கை மூலமாகப் பார்த்தால், புற அளவில் தோன்றும் வேறுபாடுகளின் அளவு குறையும்.
உலகளாவிய ஒருமைப்பாட்டின் நமது சனாதன அத்யதம் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருட்களையும் உள்ளடக்கியது. நமது புற வேறுபாடுகளுடன், நாம் ஒற்றுமையாக இணைக்கப்பட்டுள்ளோம். ஆனால் அத்தகைய கண்ணோட்டம் மேற்கு நாடுகளில் இல்லை. அங்கே ராஜ்ஜியங்கள் வலுவான அரசர்களால் உருவாக்கப்பட்டன. அவர்கள் பிரதேசங்களை கைப்பற்றி இணைத்து பேரரசுகளை ஒருங்கிணைத்தனர்.
1757ஆம் ஆண்டு பெங்காலை கைப்பற்றிய பிறகு பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் இந்தப் பெரிய நிலத்தை துண்டு துண்டாக்கத் தொடங்கினர். 'இன்னர் லைன் பெர்மிட்' போன்ற விதிகள் மூலம் இந்தியாவின் வட கிழக்கை பாரதத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அவர்கள் துண்டித்தனர். தவறான கதைகளை புனைந்து, அவர்கள் மக்களை பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தினர்.