சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் மனதின் குரல் (Mann ki Baath) என்ற வானொலி நிகழ்ச்சியில் நேரலையாக பேசி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சி அவரது 100வது நிகழ்ச்சியாகும்.
மோடி புகழ்ந்த ஆளுமைகள்:பிரதமர் மோடி நாட்டு மக்களோடு உரையாடும் மனதின் குரல் வானொலி உரையாடல் நிகழ்ச்சியின் 100வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதனை சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இதுவரை ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும் திரைப்பட நடிகைகள் அர்ச்சனா, லட்சுமி ராமகிருஷ்ணன், திரைப்பட பாடகர் தீனா, கரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், வீராங்கனைகள், இளைஞர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆசிரியர் ஹேமலதா:வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவதை கேட்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரோனா ஊரடங்கு காலத்தில் வீடியோவாக எடுத்து யூடியூப் மூலம் பாடங்களை எடுத்த விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஹேமலதா குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்.
தமிழ்நாட்டினருக்கு விருது:மேலும், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பேசிய நபர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கௌரவித்தார். மேலும், இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம் செய்யும் விவசாயிகள், விளைபொருட்களை ஆளுநருக்கு பரிசாக அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல், கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோரும் தங்களது அனுபவம் குறித்தும் பிரதமர் தங்களை குறித்து பேசியதால் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது பற்றியும் அவர்களின் மொழியிலேயே பேசியபோது, ஆளுநர் மட்டும் இல்லாமல் அனைவரும் சிரித்தனர். இவர்கள், உலகம் முழுவதும் சென்று அதிக விஷத்தன்மைமிக்க பாம்புகளைப் பிடித்தவர்கள் மற்றும் பாம்பு விஷ முறிவு மருந்துகளை கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றியவர்கள்.
அதேபோல் திரைப்படப் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி, ஆளுநர் முன் பாடல் பாடி காண்பித்தார். மாற்றுத்திறனாளி லெப்டினன்ட் கர்னல் துவார்க் கிஸ் அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.