சென்னை : இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியில் வரும் 9வது மாதமான ரம்ஜான், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாயந்த மாதமாக கருதப்படுகிறது. ஒரு மாதம் நோன்பு, பிரார்த்தனை மற்றும் சிந்தனை ஆகியவற்றை கொண்டு ரம்ஜான் மாதம் குறிக்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டும் உறவினர்களுடன் இன்பத்தை பகிர்ந்தும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள வாழ்த்துக் குறிப்பில், இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஒரு மாத நோன்பை கடைப்பிடித்து, இல்லாதோருக்கு ஈகை அளித்து சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாள் வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
அன்பை, அடக்க உணர்வை, எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் போது நீ மட்டும் சாப்பிடாதே, உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு என போதித்து, மானுடம் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்துக் காட்டியவர். சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களை உலகத்திற்கு தனது ஈகையாக வழங்கிச் சென்றவர்.
திராவிட முன்னேற்றக் கழகமும், நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றித் தனது பயணத்தை தொடருகிறது. என்றென்றும் தொடரும். நபிகள் பெருமகனார் போதித்த நெறி வழி நின்று, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்" என தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில், என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிலைநிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த இனிய திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :ராம்ஜான் வாழ்த்துகள் : ஈகைத் திருநாளில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி இறை வழிபாடு!