செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு சென்னை:அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை பதவி நீக்கம் செய்திருந்தார். பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களிலேயே மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்ததை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. கடந்த ஜூன் 13ஆம் தேதி இவரது வீடு, சகோதர் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அவரை கைது செய்தனர்.
அப்போது செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது.
பின்னர் அவருக்கு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்தபோது அவரிடம் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில், அவரிடம் அமலாக்கத் துறையினரும் விசாரணை நடத்தி இருந்தனர்.
முன்னதாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளின் பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்க மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு இலாகாவை முத்துசாமிக்கு ஒதுக்கி அதற்கு அனுமதிக்குமாறு ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால், செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருப்பதை குறிப்பிடாமல் அவரது உடல் நலனை மட்டும் குறிப்பிட்டு அமைச்சரவை பொறுப்பு மாற்றத்திற்கு அனுமதி அளிக்க ஆளுநர் மறுத்தார். இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி வகித்த பதவிகளை மாற்றி அவரை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்தார்.
இந்த நிலையில், நேற்று இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், கடந்த மே மாதம் 31ஆம் தேதி செந்தில் பாலாஜி மீது பண மோசடி புகார் உள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் எழுதிய கடிதத்தை ஆளுநர் மேற்கோள் காட்டினார்.
மேலும், அந்த கடிதத்தை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக ஜூன் 1ஆம் தேதி எனது ஆலோசனைகளைப் பரிந்துரைக்காமல், அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டி, விரும்பத்தகாத வார்த்தைகளைக் கூறி பதில் கடிதம் எழுதினீர்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜூன் 15ஆம் தேதி செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் இருப்பதை காரணம் காட்டி அவரது இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்குமாறு பரிந்துரைத்தீர்கள். செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதையும், நீதிமன்ற காவலில் இருப்பதையும் அதில் குறிப்பிடவில்லை.
முக்கியமான உண்மைகளை குறிப்பிடவில்லை என்பதால் விளக்கம் கேட்டு ஜூன் 15ஆம் தேதி கடிதம் எழுதினேன். ஆனால், நீங்கள் 15ஆம் தேதி அனுப்பிய கடிதத்தின் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கும் படி 16ஆம் தேதி எனக்கு கடிதம் அனுப்பினீர்கள். பின்னர், செந்தில் பாலாஜி இலாகாக்களை மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்தேன்.
இருப்பினும், செந்தில் பாலாஜி வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக அவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதற்கு உடன்படவில்லை. எனக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் குழுவில் இருந்து நீக்க மறுத்து, அவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தக்கவைத்து அரசாணை வெளியிட்டீர்கள்.
நேர்மையான விசாரணை மற்றும் நீதியின் போக்கில் இடையூறு விளைவிக்கும் செல்வாக்கு செந்தில் பாலாஜிக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், நீங்கள் அவரை அமைச்சராக வைத்திருந்தீர்கள். இது மத்திய புலனாய்வு முகமையைக் கூட மிரட்டி தடுக்க அவரை மேலும் தைரியப்படுத்தியது. வருமான வரித்துறை அதிகாரிகள் மே 28ஆம் தேதி செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய வீடுகள் மற்றும் நபர்கள் மீது சோதனை நடத்தினர்.
அப்போது அவரின் ஆதரவாளர்கள் சோதனையை நடத்தவிடாமல் தடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளை உடல் ரீதியாக தாக்கி காயப்படுத்தி, மதிப்புமிக்க ஆவணங்களைப் பறித்துச் சென்றனர். உள்ளூர் போலீசாரும் போதுமான உதவிகளை வழங்காததால், வருமான வரித்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப்-இன் பாதுகாப்பையும், உதவியையும் நாட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
இருப்பினும், செந்தில் பாலாஜியைத் தக்கவைக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவது உங்கள் ஆரோக்கியமற்ற பாரபட்சத்தை பிரதிபலிக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால், சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்ற நியாயமான அச்சம் நிலவுகிறது.
இத்தகைய சூழலில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 154, 163 மற்றும் 164 ஆகிய பிரிவுகளின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, செந்தில் பாலாஜியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து சட்ட ரீதியாக சந்திப்போம் என்று பேட்டியில் தெரிவித்தார். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளுநரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நியமனம் செய்யப்பட்ட ஆளுநருக்கு கிடையாது என திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று தமிழ்நாடு ஆளுநர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ததை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் அறிவுரையின்படி மறு உத்தரவு வரும் வரை பதவி நீக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:'அதிகாரம் இல்லாத ஆளுநர் அறிவிப்பு...?' - மூத்த வழக்கறிஞர்கள் கூறுவது என்ன?