சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட். 15) மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற இருந்த தேநீர் விருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை (ஆகஸ்ட் ) தேநீர் விருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் கட்சி தலைவர்கள், பல்துறை அறிஞர்கள், முக்கிய பிரமூகர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்து அளிக்க இருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில், கனமழை காரணமாக ராஜ் பவனில் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாலும், நாளையும் மழை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.