சென்னை: சாலிகிராமத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில் பாஜக மாவட்ட அணி பிரிவு மற்றும் நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "தமிழ்நாட்டில் கட்டமைப்புகளை உயர்த்த கடந்த 9 ஆண்டு காலங்களில் மத்திய அரசு ஏராளமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்த ஓராண்டு மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி ரயில்வேத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 800 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரூ.1,000 கோடியில் தாம்பரம் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது" என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவது பற்றி அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உட்கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் இதுபோன்ற சில கருத்துகளை கூறுவது வழக்கம். அண்ணாமலை கூறிய கருத்தை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். அண்ணாமலை வந்த பிறகு கட்சியில் உறுப்பினர்கள் இணைவது குறைந்துள்ளதாக கூறுகின்றனர். அப்படியெல்லாம் ஏதும் கிடையாது. பாஜக தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது. அண்ணாமலையும் மாநில தலைவராக தனது பங்களிப்பை தந்து வருகிறார்.