புதுச்சேரியைச் சேர்ந்த முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லீரல் செயல் இழந்த நிலையில் மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தார். இதனிடையில் அவருடைய 19 வயது மகள் தனது கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார்.
இந்நிலையில் கோவை ஜெம் மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலமாக வாழும் நபரிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை பிரித்து எடுக்கும் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முதன் முறையாக சென்னை ஜெம் மருத்துவமனையில், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் மகளிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை பிரித்து எடுத்து தந்தைக்கு பொருத்தினார்கள்.
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்களில் மகளின் உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து ஜெம் மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் பேசுகையில், ஜெம் மருத்துவமனை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் சிறு துளையிட்டு கல்லீரலின் ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக நுண்துளை அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி மூலமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சை முறை இதுவரை தாய்வான், கொரியா, சீனா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டு வந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, மாணவி குணமடைந்த நிலையில் மருத்துவர்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஜெம் மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும், இதுவரை 22 நபர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் இந்த சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உதவும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.
இதையும் படிங்க: 462 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு!