சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் கொரோனா பரவியுள்ளதால், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 12ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முறையே மார்ச் 24, 26 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ஏப்ரல் மாதம் 20ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கான விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரும் தற்போது குணமடைந்து வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களிடம் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகள், கிருமி நாசினி தெளித்துச் சுத்தம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அரசு சார்பில் நோய்த் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரத்தப் பரிசோதனை நிலையங்கள் கூடுதலாக ஏற்படுத்தவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எவ்வளவுதான் நடவடிக்கை மேற்கொண்டாலும் குழந்தைகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இந்நோய் வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 75% பேர் மேற்குறிப்பிட்ட வயதினை உடையவர்கள் எனவும் கூறியுள்ளது. எனவே பள்ளிகளுக்கு மத்திய அரசின் அறிவுரையை ஏற்று பிற மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது போல், தமிழ்நாடு அரசும் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கொரோனா அச்சுறுத்தல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசு ஆலோசனை? - கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.