சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (17.04.2023) தலைமைச் செயலகத்தில், உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டின் பெள சென் (Pou Chen) குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (M/s High Glory Footwear India Private Limited) நிறுவனம், அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2302 கோடி முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை - சிப்காட் தொழிற்பூங்காவில், காலணிகள் உற்பத்திக்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இலக்கினை விரைவில் அடைவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை (Capital intensive high-tech industries) ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் (Employment intensive) ஈர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 2024ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீட்டினை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தைவான் நாட்டைச் சேர்ந்த பெள சென் கார்ப்பரேஷன் (Pou Chen) காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலகப் புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. இந்நிலையில் பௌ சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில், 2,302 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற் பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்கவுள்ளது.