சென்னை:தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதி படி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் அமைக்கப்படும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவிற்கான சரிபார்ப்புக் குழுவில் (Screening Committee) மாவட்ட வழங்கல் அலுவலரால் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலரும் உறுப்பினராகவுள்ளதால், அலுவலர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சரிபார்ப்புக் குழுவின் பணிகளில் முழுமனதோடு ஈடுபட்டு ஒத்துழைக்க எதுவாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சரிபார்ப்புப் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்கு பின்னரான இத்தெரிவு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால், தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு எதுவாக மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.