சென்னை: தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், சிலிண்டர்களுக்கான முழுத் தொகையை மாநில அரசு தருவதில்லை எனவும், வெறும் 460 ரூபாய் மட்டுமே அரசு வழங்கும் நிலையில், மீதியுள்ள தொகையை தங்களது குறைந்த சம்பளத்தில் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 29ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்துவோம் எனவும், ஜாக்டோ ஜியோ நடத்தக்கூடிய போராட்டங்களில் தாங்களும் பங்கேற்போம் என்றும் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (நவ-21)நடந்தது.
அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மலர்விழி பேசுகையில், ‘சத்துணவு மையங்களில் பணிபுரிய அமைப்பாளர், சமையலர், சத்துணவு உதவியாளர் என ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 52 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனை நிரப்புவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஒரு சத்துணவு அமைப்பாளர் நான்கு, ஐந்து மையங்களைச் சேர்த்து வேலை பார்க்க வேண்டி இருக்கிறது. மிக முக்கியமாக 1100 ரூபாய், 1200 ரூபாய் சமையல் சிலிண்டர் விலை இருக்கும் நிலையில், அரசு வெறும் 460 ரூபாய் மட்டுமே வழங்குவதால், மீதம் இருக்கக்கூடிய தொகையை தங்களின் ஊதியத்தில் இருந்து செலவிட வேண்டி உள்ளது. உணவு மானியத்தை அரசு வழங்குவதில்லை. ஆனாலும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தொடர்ந்து எங்களின் சம்பளத்தில் மாதம்தோறும் செலவிட்டு வருகிறோம். இதுகுறித்து அரசிற்கு பல முறை எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்குவது போல் தங்களுக்கும் வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காலை உணவுத் திட்டத்தின் மூலம் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமனம் செய்யவதற்கான பணியையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மைய சமையலகத்தில் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டதை, மையம் வாரியாக பெற்று வழங்கி வருகிறோம். இந்த நிலையில் மீண்டும் மைய சமையல் கூடத்தில் இருந்து காலை உணவுத் திட்டத்தில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
சிலிண்டருக்கு மானியத்தை வழங்காத தமிழ்நாடு அரசு - சத்துணவு அமைப்பாளர்கள் குமுறல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 29ஆம் தேதி சென்னையில் ஆணையர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம். ஜாக்டோ ஜியோ நடத்தக்கூடிய போராட்டங்களில் தாங்களும் முழுமையான அளவில் பங்கேற்போம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:குரூப்-2 தேர்வில் சாதித்த 55 வயது மாற்றுத்திறனாளியின் வைராக்கிய கதை