சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் "பள்ளிக்கல்வித்துறை ஆணையர்" என்ற பதவி உருவாக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அடுத்த இடத்தில் இந்த ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்படி ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கொண்டு செல்ல விரும்பும் எல்லா விஷயங்களும் ஆணையர் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் வரும் நீதிமன்ற வழக்குகளை சரி செய்வது, கல்வித் தரத்தினை உயர்த்த நடவடிக்கை எடுப்பது, மாவட்டங்களில் பள்ளிகளை ஆய்வு செய்து கட்டமைப்பு மேம்படுத்துவது போன்ற பணிகள் ஆணையருக்கு வழங்கப்பட்டன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனரின் முழு அதிகாரத்தையும் பள்ளிக்கல்வி ஆணையர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டு முழு அதிகாரத்துடன் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறை தலைமை பொறுப்பில் மீண்டும் இயக்குனரே நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதனிடையே அண்மையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில், நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அதன் பிறகு புதிய ஆணையர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.