சென்னை: தமிழ்நாடு அரசு வனத்துறையின் வனப்படையினை நவீன தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாட்டுத்திட்டங்கள் மற்றும் மனித வன மேலாண்மை நடைமுறைகளில் சிறப்பான உத்திகளை கையாண்டு மூன்றாண்டு காலத்திற்குள் 2022 முதல் 2025 வரை 52.83 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்த நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனப்படையினை நவீனமயமாக்கல் திட்டமானது, மனித வன மேலாண்மை உட்பட 6 கூறுகளை உள்ளடக்கியுள்ளது.
முதல் கூறு: ’ரூ.8.55 கோடி செலவில் கள வனப்பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், தமிழ்நாடு வனப்பயிற்சி கல்லூரியில் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக வனப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சியும் முதல் கூறில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கூறு: வனத்துறையின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரூ.40 லட்சம் செலவு செய்யப்படும். இதில் வனவிலங்குகளின் சிறந்த மேலாண்மைக்காக கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்குதல், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனக்குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் சைபர் செல் அமைத்தல் மற்றும் டிஜிட்டல் வயர்லெஸ் நெட்வொர்க் தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் இரண்டாம் கூறில் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.