சென்னை:பொதுவாகவே அரசு ஊழியர்கள், ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் என அனைவரும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது நீண்ட நாள் விடுமுறைகளைத் தான். தற்போதைய காலகட்டத்தில் தங்களது வேலைக்காகச் சொந்த ஊரை விட்டு சென்னை போன்ற வெளி ஊர்களுக்கு வந்து அங்கேயே தங்கி பணிபுரிபவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
இப்படியான சூழலில் உள்ள எல்லோருக்குமே வருடத்தில் ஒரு முறையாவது தங்களது சொந்த ஊருக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை அதிக அளவில் இருக்கும். குறிப்பாகப் பண்டிகைகளை தங்களது சொந்த ஊரில் கொண்டாடினால்தான், அந்த விழா முழுமை பெற்ற உணர்வே ஏற்படும்.
அந்த வகையில், தீபாவளி, பொங்கல், அரசு விடுமுறை தினங்கள் என்று விடுமுறை நாட்களில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 13ஆம் தேதி திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாகப் பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டிய சூழல் உள்ளது.