இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநிலத்தில் சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக, உணவுப் பொருள்களையும், அத்தியாவசியப் பொருள்களையும் நேரடியாக வழங்கிவருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் நோய்த் தொற்று அதிகளவில் பரவ வழிவகுக்கும்.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவ நினைத்தால், தாங்கள் வழங்கும் நிதியினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையர், நகராட்சி ஆணையர், செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் அளிக்கவேண்டும்.
அவர்கள் அந்தப் பொருள்களை ஏழை, எளிய மக்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். எனினும், அத்தியாவசியமான பொருட்களுக்கு மட்டும், சில குறிப்பிட்ட நேரங்களில் தனித்தனியாக சென்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசின் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பும் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெளி மாநில தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்- திமுக தலைவர் ஸ்டாலின்