சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் காப்பகங்களில் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை ஆகிய 2 புலிகள் காப்பகத்தில் கள இயக்குனர்களின் பதவிகள் காலியாக உள்ளன எனவும் இதனை நிரப்பக்கோரியும், ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக இன்று (நவ.28) வனத்துறை இரண்டு பதவிகளுக்கும் கள இயக்குனர்களை நியமித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், தற்போது சென்னையில் வனத்துறையில் வனப்பாதுகாவலராக இருந்த கே.ராஜ்குமார் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கள இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கோயம்பத்தூரில் வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வனப்பயிற்சி நிறுவனத்தில் துணை இயக்குனராக பணி புரிந்த ஆர்.பத்மாவதி தற்போது காலியாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் கள இயக்குனராக நியமிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.