தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கும் தன்மை கொண்ட செல்லோபன் காகிதத்தால் பட்டாசுகள் பேக்கிங்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்!

Madras High court: பட்டாசுகள் பேக்கிங் செய்ய செல்லோபன் காகிதம் (cellophane paper) பயன்படுத்தப்படுவதாகவும், இது மக்கும் தன்மை கொண்டது எனவும் பட்டாசு ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 8:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு, 2020 ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விதித்த தடையை உறுதி செய்து உத்தரவிட்டு, சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணையில் உள்ளது.

கடந்த முறை தமிழ்நாடு அரசுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகளால் பட்டாசுகளை பேக்கிங் செய்யாமல் இருக்க தமிழ்நாடு அரசு ஏதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டாசுகளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு விருதுநகர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பட்டாசு ஆலைகள் சங்கம் தரப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், "பட்டாசுகளை பொதிய அதாவது பேக்கிங் செய்ய செல்லோபன் காகிதம் (cellophane paper) பயன்படுத்தப்படுவதாகவும், இது மக்கும் தன்மை கொண்டது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கும் முன் நிபுணர் குழு ஏதும் அமைக்கப்பட்டதா அந்த குழுவின் விபரங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி அமிர்த பிரசாத் ரெட்டியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details