சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (நவ.23), விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு மீது வைத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (6x4, 12x8, 10x8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன.