சென்னை :தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். வேங்கை வயல் பிரச்சினை குறித்து விசாரித்து வந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையமான சிஎம்டிஏவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர் உள்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
துத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஷா அஜித் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனமிக்கப்பட்டு உள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனி மேரி சுவர்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ். உமாவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜூம் நியமிக்கப்பட்டு உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம்.என். பூங்கொடி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக கே.எம். சரயுவும் தஞ்சை மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேங்கை வயல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சீரிய முறையில் விசாரணை நடத்தி வந்த புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக மெர்சி ரம்யா என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மேல்கண்ட ஆட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். வேங்கைவயல் பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வந்த ஆட்சியர் கவிதா ராமு சி.எம்.டி.ஏவுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :மாம்பலம் ரயில் நிலையம் - தி நகர் பேருந்து நிலையம்.. நிமிடங்களில் கடக்க ஆகாய நடைபாதை- முதலமைச்சர் துவக்கி வைத்தார்!