சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 22ஆம் தேதி திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமாகினர். மீனவர்கள் மாயமாகி 55 நாள்களுக்குப் பிறகு மியான்மர் நாட்டில் விசைப்படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக மியான்மர் நாட்டு கடலோரக் காவல் படையினர் தகவல் தெரிவித்தனர்.
அங்கு நிலவும் மோசமான வானிலையால் மீனவர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் நேற்று (செப். 29) காலை சிறப்பு விமானம் மூலம் மீனவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வானிலை மாறுதல்களால் விமானம் இயக்கப்படாமல் தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில், எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் தனது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.