தீயணைப்புத் துறை பயிற்சி மைய இயக்குனர் மீனாட்சி சென்னை:தமிழகம் முழுவதும் மக்கள் நாளை தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடவுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதும் அப்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் மாநில தீயணைப்புத் துறை பயிற்சி மைய இணை இயக்குனர் மீனாட்சி ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், பிறருக்கு நம்மால் எந்த வித பிரச்சனையும் வராத வகையிலும், விபரீதமான விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தாத வகையிலும் தீபாவளி கொண்டாட்டம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பட்டாசு வாங்கும்போதும், வெடிக்கும்போதும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் அளித்த வழிகாட்டுதல்களைப் பாருங்கள்.
தொடர்ந்து பேசிய அவர், ராக்கெட் பட்டாசுகள் தான் 90 சதவீதம் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும், ராக்கெட் பட்டாசுகளைத் தவிர்ப்பது நல்லது எனவும் மீனாட்சி அறிவுறுத்தினார். பட்டாசு கொளுத்திய பின் அது வெடிக்க வில்லை என்றால் மீண்டும் அதனைக் கையில் எடுக்கவோ, அல்லது கீழே குனிந்து பார்க்கவோ கூடாது என தெரிவித்த அவர், அதனை உடனடியாக தண்ணீர் ஊற்றி அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தீபாவளிக்கு செம்ம க்யூட்டா எப்படி ரெடி ஆகலாம்: முகத்துக்கும், கூந்தலுக்கும் இதை ட்ரை பண்ணுங்க.!
மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் விபரீதம் தெரியாமல், குப்பைகளை ஒன்று சேர்த்து அதில், பட்டாசுகளை மொத்தமாகக் கொட்டி வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், வீட்டில் உள்ள பெரியவர்கள் இதைக் கவனிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பட்டாசு வெடிக்கும் போது, திடீரென நம் மீது தீப்பொறி பட்டுவிட்டால் அவசரப்பட்டு ஓடக்கூடாது எனத் தெரிவித்த மீனாட்சி, ஓடினால், காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் சூழலில், தீ வேகமாகப் பரவ நேரிடும் என தெரிவித்தார். மாறாக தீ மேலே பட்டவுடன் கீழே படுத்து உருள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பட்டாசு வெடிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை அதேபோல் பட்டாசு வெடிக்கும் போது பறவைகள், விலங்குகளுக்கு எந்த ஒரு துன்புறுத்தலும் ஏற்படுத்தக் கூடாது எனவும், அரசு விதித்துள்ள நேர விதிகளின்படி தான் அனைவரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் மீனாட்சி அறிவுறுத்தியுள்ளார். மேலும், எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இனிமையாகத் தீபாவளியைக் கொண்டாடுங்கள் எனக்கூறிய அவர், பட்டாசுகளை வெடிக்கும் போது தீ விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், தீயணைப்புத் துறை எப்போதும் பொதுமக்கள் உடனிருந்து பாதுகாப்பான சேவைகளைச் செய்து வருகிறது எனக்கூறிய அவர், தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏழைக் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து அனைவரும் இனிமையான தீபாவளியைக் கொண்டாடுங்கள் என மாநில தீயணைப்புத் துறை பயிற்சி மைய இணை இயக்குனர் மீனாட்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Diwali Legiyam: இனிப்பு பிரியர்களே அலர்ட்…தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் மட்டும் இல்ல லேகியமும் சேத்து செய்யுங்க.. ஏன் தெரியுமா?