சென்னை: 2023 -24 ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அவர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 18 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
அப்போது பேசிய அவர், "தரமான கல்வியும், மருத்துவ வசதிகளும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடச் செய்வதே இந்த அரசின் அடிப்படை நோக்கம். இதனைக் கருத்தில் கொண்டே மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார கட்டமைப்பை தமிழ்நாட்டின் மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த அரசின் முன்னோடித் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்று நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்க உள்ளது.
இதன்படி, முதல் கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 835 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11 லட்சத்து 82 ஆயிரம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.