சென்னை:2023-24ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.21) தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதில், தமிழ்நாடு விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலாத் திட்டம் ஆகியவற்றை அறிவித்தார்.
அவர் பேசும்போது, "சில வெளிநாடுகளில் விவசாயத்தில் உயர் ரகத் தொழில்நுட்ப பயன்படுத்தப்பட்டு உற்பத்தி திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கின்றது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நமது விவசாயிகள் விவசாயிகள் அறிந்து கொள்வதால், நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா? என்ற எண்ணம் ஏற்படும், அது சாகுபடி சார்ந்த தேடலை உண்டாக்கும்.
எனவே, 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசின் நிதியில் இருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.