சென்னை: மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாரதியின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றது. சென்னை முகப்பேரைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 141 பேர் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை நடித்துக் காட்டினர். விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடகத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகாகவி நாடகத்தை பார்த்து கண் கலங்காமல் இருந்தால் இந்தியராக, தமிழராக இருக்க முடியாது என்றும், மாணவர்களின் நாடகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், நாடகத்தை இயக்கிய பாரதி பாலா எனது தொகுதிக்காரர் என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
வாரணாசியில் பாரதி வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசின் சார்பில் புதுப்பித்து முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததாகவும், அவர் வெளியிட்ட பாரதியாரின் நூலை தான் பெற்றுக் கொண்டது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
37 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் முதல் முறையாக ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றதாகவும், வரும் காலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த அரங்கில் நடைபெற்றாலும், இதுபோன்ற நாடக நிகழ்வு நடைபெறுமா என்பது தெரியவில்லை என அமைச்சர் கூறினார்.