தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து மாநில அளவில் போராட்டம் - chennai latest news

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தனியார்மயம் புகுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற 4ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

tneb strike aginst privatization
மின்சார வாரியம் தனியார்மயம் ஆவதைக் கண்டித்து மாநில அளவில் போராட்டம்

By

Published : Nov 2, 2020, 7:12 PM IST

Updated : Nov 2, 2020, 8:22 PM IST

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் நிர்வாகிகள், "தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு கோடியே 93 லட்சம் மின் இணைப்புகளைப் பராமரித்து தரமான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கிவருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய தலைவர், மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் ஆகியோரின் நலன்கள் குறித்து கவலைப்படாமல் மின்வாரியம் கட்டமைப்பை சிதைக்கும் நோக்கில் செயல்படுகிறார்.

மேலும், தனியாருக்குத் துணைமின் நிலையங்களை பராமரிக்கும், இயக்கவும் ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், மதுரை மாவட்டம் சமயநல்லூர், சென்னை மின் வாரிய தலைமையகம் ஆகிய மூன்று நிலைகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்க டெண்டர் விட அனுமதி வழங்கியுள்ளார். அதேபோல் துணை மின் நிலையங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களை பயன்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார்.

மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பேட்டி

மின்துறையில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. மின்துறையை தனியார்மயப் படுத்துவதால், நியாயமான ஊதியத்துடன் நிரந்தர வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைக்காமல் போகும். தனியார் நிறுவன முதலாளிகள் மூலம் உழைப்பு சுரண்டல் நடைபெறும். புதிய மின் உற்பத்தித் திட்டங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடும் பணி தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது.

உப்பு உடன்குடி, எண்ணூர் விரிவாக்கம் ஆகிய புதிய மின் திட்டங்களில் பணியாற்றிவந்த பணியாளர்கள், அலுவலர்கள் என 478 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், அனல் மின் நிலையங்களில் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 730 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். அதனை குறைத்து 765 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டும் என கூறுகின்றனர். இதன்மூலம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதால் மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்படும்.

52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருந்தாலும், இந்த கரோனா காலத்தில் கூடுதல் பணி சுமையுடன் மின்வாரிய ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மின்வாரிய பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகளைக் கூட மின்வாரிய நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு மின் வாரிய நிர்வாகம் தொழிற் சங்கம் இணைந்து ஏற்படுத்திய முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறி தொழிற்சங்கங்கள் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை மின்வாரிய நிர்வாகம் உத்தரவாக வெளியிட்டுள்ளது.

மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டால் பேரிடர் காலங்களில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும். ஒடிசாவில் மின்வாரியம் தனியாரிடம் விடப்பட்டதால், புயலின்போது அங்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. எனவே, மின்சார வாரியத்தில் தனியார்மயம் புகுத்தப்படுவதை எதிர்த்து வருகின்ற 4ஆம் தேதி மாநில தலைமை அலுவலகம் முன்னர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தப்படும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:காற்றாலை கொள்முதலால் மின்துறைக்கு பலகோடி நஷ்டம் - மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு குற்றச்சாட்டு

Last Updated : Nov 2, 2020, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details