மக்கள் நல்வாழ்வுத் துறை கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 91 ஆயிரத்து 851 பயணிகள் நேற்று வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 27,416 பேர் முடித்துள்ளனர். தற்போது 92 ஆயிரத்து 531 பயணிகள் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 253 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் தனி வார்டில் 1,864 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்டிலேட்டர் 3,371ம், 22,049 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.