சென்னை: மின்சார கட்டண மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துவரும் நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் இதுகுறித்த எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் வீட்டில் மின்சாரம் கட்டணம் கட்டவில்லை. இன்றிரவுக்குள் உங்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும். உடனடியாக இந்த நம்பரை காண்டக்ட் செய்யுங்கள் எனக்கூறி செல்போனிற்கு சிலர் குறுந்தகவல் அனுப்ப வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் அதில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி, மின்சார கட்டணம் செலுத்த நாங்கள் உதவி புரிகிறோம் என்று சிலர் பதிலளிப்பர்.
அதன் பிறகு மின்சார ஊழியர் பேசுவது போல பேசி உங்களது மின்சார எண், கட்டணம் உள்ளிட்டவற்றை நம்புவது போல கச்சிதமாக தெரிவித்து, நாங்கள் அனுப்பும் ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் 10 ரூபாய் செலுத்தினால் போதும் இதுபோன்ற பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்வதாக அவர்கள் கூறுவர்.