தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஷச்சாராய உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றம் - காவல்துறை நடவடிக்கை! - Chennai news

விஷச்சாரய விவகாரத்தில் 22 பேர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தொழிலதிபர் இளையநம்பி உள்பட 13 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai
Chennai

By

Published : May 17, 2023, 9:06 PM IST

Updated : May 17, 2023, 9:21 PM IST

சென்னை :விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. விஷச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் இளையநம்பி உள்பட 13 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடந்த 13.05.2023 அன்று நடந்த விஷச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 நபர்களும், செங்கல்பட்டில் 8 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் கம்பெனியின் அதிபர் இளையநம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மெத்தனாலை செங்கல்பட்டு, சித்தாமூரில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும், மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதோடு இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களை பற்றிய புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷச்சாராயம் சென்னை வானகரம் ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட் என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது.

ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி மெத்தனால் திரவத்தை 2018ஆம் ஆண்டு வாங்கிய நிலையில், கரோனா காரணமாக அதை தொழிற்சாலையில் பயன்படுத்த இயலாமல் போனதாலும், இவர்களது தொழிற்சாலை தீவாலான நிலையில் 1,200 லிட்டர் விஷச்சாராயத்தை பாண்டிச்சேரியைச் சேர்ந்த பரகதுல்லா (எ) ராஜா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66,000க்கு விற்பனை செய்துள்ளார்.

இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு மரணம் ஏற்படுத்திய விஷச்சாராயம் கிடைத்திருப்பது தெரியவந்தது. மேலும், விஷச்சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷச்சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இவர் 400 லிட்டர் விஷச்சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இவரும் கைது செய்யப்பட்டியிருக்கிறார். இவர் மீது 6 திருட்டு வழக்குகளும், 5 மது விலக்கு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

1200 லிட்டர் விஷச்சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்கணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்பனை செய்துள்ளனர். மீதமிருந்த 1,192 லிட்டரை 48 மணி நேரத்தில் பல்வேறு நபர்களிடமிருந்து காவல்துறையினர் விரைந்து கைப்பற்றினர். இந்த விஷச்சாராயம், பறிமுதல் செய்யப்படாமல் போயிருந்தால், இது பல ஊர்களுக்கும் சென்று பெருமளவில் உயிர் சேதம் ஏற்படுத்தியிருக்கும்.

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பெரும் உயிர் சேதம் ஏற்படுவதை தடுத்துவிட்டனர். உயிர் இழப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராயம், கிராமப் பகுதிகளில் காய்ச்சி வடிக்கப்பட்ட கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் எரிச் சாராயமும் அல்ல.

இது தொழிற்சாலைகளில் தின்னர் போன்ற பொருட்களைத் தயார் செய்ய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதாலும், இது மனிதர்களின் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதாலும் இவற்றை விற்பனை செய்த ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி, பரகத்துல்லா (எ) ராஜா, ஏழுமலை விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் காவல் நிலையம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை கொலை வழக்காக (302 IPC) மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள், 71 மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய துணையோடு ஆய்வுச் செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :"கள்ளச்சாராயம் விற்றால் குண்டாஸ்; சிறந்த அதிகாரிகளை நியமனம் செய்யுங்க" - முதலமைச்சர் உத்தரவு!

Last Updated : May 17, 2023, 9:21 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details