சென்னை:கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் தீட்சிதர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீட்சிதர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது கொடுத்த புகாரில் குழந்தை திருமணம் மற்றும் தீட்சிதர்கள் மீது எடுத்த கைது நடவடிக்கை என்பது முற்றிலும் பொய்யான நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் குழந்தைகள் துன்புறுத்தபட்டதாக பொய் வழக்கு தீட்சிதர்கள் மீது போடப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கின் படி சிறுமிகளை கட்டாயப்படுத்தி இரு விரல் கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும், இதனால் சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் கன்னித்தன்மை சோதனையை காவல்துறையினர் மேற்கொண்டது குழந்தைகள் உரிமை மீறல்" என கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் இதற்கு வரவேற்பு தெரிவித்து, கோயிலை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டு தீட்சிதர்கள் மீது வைப்பதாக தெரிவித்திருந்தனர்.
ஆளுநரின் இந்த கருத்து தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இது குறித்து விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதில், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானவை என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் அதன் உண்மை தன்மையை கண்டறிந்து விசாரணை நடத்திய போது நான்கு குழந்தை திருமணங்கள் நடந்தது என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் அதற்கான ஆதாரங்களை திரட்டி சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் மற்றும் குழந்தை திருமண சட்டப்பிரிவு 9, 10 படி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்ய பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில், சட்ட ஆலோசகரின் அறிவுரை படி இரண்டு சிறுமிகளுக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை எனவும் இதனால் மன உளைச்சலில் சிறுமி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறிய தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொடர்பாக கருத்து கூறிய நிலையில், அது உண்மைக்கு புறம்பானது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.