சென்னை:பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நாவலூரில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அம்மா மற்றும் மகளுக்கு 2 பேருக்கு மே 4 ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்களின் மாதிரிகள் கரோனா பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் ஒருவருக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ஒமைக்ரான் வகை தொற்றும் மற்றொருவருக்கு BA4 என்ற ஒமைக்ரான் புதிய வகை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று ஏற்பட்டவருக்கு பயண விவரம் (travel history) எதுவும் இல்லை, 19 வயதுடையவருக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிய வகை பற்றி எதுவும் கண்டறியப்படவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்ததால் 7 நாட்களிலேயே அவர் குணம் அடைந்து தற்போது நலமுடன் இருக்கிறார்.
புதிய வகை ஒமைக்ரான் BA4 தொற்று ஏற்பட்ட நபரின் பரிசோதனை முடிவுகளை நாக்பூர் பரிசோதனை மையத்துக்கு அடுத்த கட்ட பரிசோதனைக்காக 13 ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. அங்கும் அந்த நபருக்கு புதிய வகை ஒமைக்ரான் BA4 தொற்று இருப்பது 19ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. மேலும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA4 தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்