சென்னை:தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் பெண்களை குறிவைத்து ஆபாசமாக புகைப்படம் எடுக்கும் கும்பலைச் சேர்ந்த ஐடி பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரைநிர்வாணம் புகைப்படத்தின் விலை 50 ரூபாய், முழு நிர்வாண புகைப்படத்தின் விலை 100 ரூபாய், வீடியோக்கள் ஆயிரம் ரூபாய் என சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வைத்திருந்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 21வயது இளம்பெண் ஒருவர், சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தனது நண்பர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அந்த புகைப்படத்தை தனது நண்பர் மூலமாக 47 ரூபாய்க்கு வாங்கி பார்த்தபோது, கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளிக்காக பிரபல ஷாப்பிங் மாலிற்குச் சென்று துணி எடுத்தபோது தனக்கு தெரியாமல் எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்தது.
இதனால், தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் பணம் செலுத்திய வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தினர். அதில், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆர்யா (22) என்பது தெரியவந்தது. உடனடியாக ஈரோடு விரைந்த சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் அந்த இளைஞரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆர்யா கல்லூரியில் ஐடி பி.டெக் படிப்பை முடித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இளைஞர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான துணிக்கடை, பிரபல மால்கள், திரையரங்குகள், மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதை ஆர்யா வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
குறிப்பாக பெண்களின் துணி விலகிய நேரத்திலும், மாடர்ன் உடையில் வரும் பெண்களை ஆபாசமாகவும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வந்துள்ளார். பின்னர், அந்த பெண்களின் புகைப்படங்களை செயலி (App) மூலமாக ஆபாசமாக சித்தரித்து, டெலிகிராம் மூலமாக ஆர்யா விற்பனை செய்து வந்துள்ளார். குறிப்பாக டெலிகிராமில் zip பைல் மூலமாக ஒரு புகைப்படத்தின் விலை 50 ரூபாய் எனவும் நிர்வாண புகைப்படத்தின் விலை 100 ரூபாய் எனவும் ஆபாச வீடியோக்கள் 1000 ரூபாய் என விற்பனை செய்து வந்துள்ளார்.
ஆர்யா தனியாக பல டெலிகிராம் சேனலை தொடங்கி அதில் பொது இடங்களில் எடுக்கும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் பொதுஇடங்களில் எடுத்த பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து 4 லட்சம் ரூபாய்க்கு டெலிகிராமில் விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கரோனா காலக்கட்டத்தின்போது பெற்றோரை பிரிந்து தாத்தா, பாட்டி வீட்டிற்குச் சென்று தங்கியதால் அங்கு தனிமையில் இருந்து வந்ததாகவும், மேலும் அதிகப்படியான நண்பர்கள் இல்லாததால் செல்போனில் மூழ்கியுள்ளார்.