சென்னை:ஆர்பி.ஐ(RBI) அனுமதி பெறாமல் இயங்கி வரும் 61 கடன் செயலிகளை உடனடியாக நீக்குமாறு கூகுள் நிறுனவத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், "கடந்த 4 மாதங்களில் முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட உயரிய பொறுப்புகளில் உள்ள நபர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்டிருந்த 386 வீடியோக்கள் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 256 ஆன்லைன் கடன் செயலிகளை நீக்கம் செய்து மாநில சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் சமூக வலைதளம் மூலமாக சைபர் கிரைம் மோசடிகள், அவதூறு மற்றும் பொய்யாக பரப்பப்படும் கருத்துகளால் சாதி மத மோதல்கள் என அதிகளவு குற்றங்கள் அரங்கேறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி கலவரம், வடமாநில நபர்கள் தாக்கக்கூடிய சம்பவம், கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவிய தவறான கருத்துகளால் பின்நாளில் பூதாகரமாக வெடித்த நிலையும் ஏற்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் சமூக விரோதிகளால் பரப்படும் பொய்யான மற்றும் அவதூறு கருத்துகள், ஆன்லைன் மோசடி வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக மாநில சைபர் கிரைமில் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது.